திமுக, அதன் தலைவர் கலைஞர் இவர்களிடம் கூட்டணி வைத்து கொள்ளும் கூட்டணிக்கட்சியினருக்கு கிடைக்கும் மரியாதைகளும் மதிப்புகளும் எல்லோருக்கும் நன்கு புரியும். ஆனால் அதே போல அதிமுகவில் கூட்டணி அமைத்தவர்களின் கதி என்ன என்று நினைத்துப்பாருங்கள். முதலில் அதிமுகவில் காமடியன்கள் ஆன ஹீரோக்கள் பற்றிய ஒரு பார்வை.
கார்த்திக்: இவர் சினிமா உலகில் கொடிகட்டி பறந்தவர் இவருடைய தந்தை முத்துராமனைப்போலவே. கள்ளர் இனத்தை சேர்ந்தவராயினும் முத்துராமன் இவர் அளவுக்கு அரசியலில் ஈடுபாடோ, ஆர்வமோ, சாதிப்பற்றோ கொண்டிருக்கவில்லை. அதே போலத்தான் கார்த்திக்கும் இருந்தார். அதே நேரத்தில் தன்னுடைய சில பல கெட்ட பழக்கங்களினால் இவர் சினிமாவை விட்டு தொலைந்து போக இருந்த நேரத்தில் அவரது சாதிபலம் கொஞ்சம் தெம்பை கொடுக்க இவர் திடீரென, நேதாஜி ஆரம்பித்த பார்வர்டு பிளாக் கட்சியை தமிழகத்தில் வேறூன்ற செய்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் இன ஆதரவோடு அந்த கட்சியில் மாநில தலைவராக ஆக்கப்பட்டு திடீரென உயர்ந்தார். ஆனால் அவர் கொடுத்த பத்திரிக்கை பேட்டிகளும் அவரது நடையுடை பாவனைகளும், கட்சி தலைவராக இருப்பதற்கான எந்த ஒரு தகுதியற்ற தனமையை கொடுத்தாலும் அவரது சாதி மக்கள் தங்களுக்கு என ஒரு யாவரும் அறிந்த தலைவர் வேண்டும் என்கிற ஒரே காரணத்தால் சகித்து கொண்டனர். சென்ற முறை அவர் தொகுதி பங்கீடுக்கு ஜெவுடன் பேசிவிட்டு பின்னர் வந்து (அவருடைய வாய்ஸ் மாடுலேஷனில் படிக்கவும்) "என்னது அந்தம்மா, ஸ்டுபிட், கெட்லாஸ்ட்ன்னு எல்லாம் கத்துறாங்க. இட்ஸ் டூ பேட்" என சொல்லி வெளியே வந்தது முதல் அவர் காமடியனாக ஆக்கப்பட்டார். அதற்கு தகுந்தது போலவே ஜூவியும் ரிப்போர்டரும் அவரை ஊதி ஊதி பெரியதாக்கி அவர் காமடி பேட்டிகளை வாங்கி பிரசுரித்து அவரை ஒரு கீழ்தரமான இடத்துக்கு கொண்டு சென்றன. அதே போல இந்த முறையும் " வாட் ஈஸ் திஸ். நாங்க தினமும் போய் காலை முதல் மாலை சாயங்காலம் வரை வெயிட் பண்ணிகிட்டு இருந்தும் அந்தம்மா எங்களை வந்து கூட பார்க்கலை. இதல்லாம் நல்லால்லை. மானம் வெட்கம் இருந்தா அடுத்த தேர்தல் வரை அங்க நான் போகமாட்டேன்" என பேட்டி கொடுத்து முழுநேர காமடியன் ஆனார்.
விஜய்: இவர் நடித்த சமீபத்திய படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதோடு மட்டுமல்ல இணையத்தில் இவரை போல ஒரு கைப்புள்ளயை இது வரை யாரும் பார்த்ததில்லை என்கிற அளவுக்கு இவர் காமடியன். அத்தோடு விட்டாரா? காவலன் படம் வெளியாவதில் சிக்கல் இருந்ததாம். உடனே அவருடைய அப்பாவுக்கு ரத்தம் கொதித்து உடனே தன் மகனின் ரசிககுஞ்சுகளை கூப்பிட்டு அரசியல் ஆசைகாட்டி விஜய்க்கும் ஆசை காட்டி... அது வரை நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது. ஆனால் அதன் பிறகு சந்திரசேக்ர் ஜெவை பார்த்து விட்டு வந்தது முதல் தான் விஜய் காமடியனாக ஆனார். பதினைந்து சீட், பத்து சீட் கடைசியாக 3 சீட் என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் எதும் இல்லை சும்மா நீங்க வந்து ஊராவூருக்கு பிரச்சாரம் செய்தால் போதும் என்கிற நிலைக்கு விஜய் தள்ளப்பட்டு இன்று விஜய் பெயரை கேட்டாலே வயிற்றில் இருக்கும் பிள்ளை கூட சிரிக்கும் அளவு காமடியனாக ஆகிப்போனார். நடுவே நாகையில் மீனவர்களை காப்பாற்ற ஒரு மீட்டிங் போட்டு அது சொதப்பி அவர் மைக் சரியில்லை என்று பாதியிலே கிளம்பி போய் திரும்பவும் சந்திரசேகர் மைக்கை சரி செய்து ஓடிப்போய் கூப்பிட்டு வந்து ஒரு வழியாக மீனவர் பிரச்சினை தீர்ந்தது. இதோ இன்று மீனவர்கள் செல்வ செழிப்புடன் மாடமாளிகையுடன் சர்வ சவுக்கியமாக இருக்கின்றனர் என்பதை அறிந்து தமிழக மக்கள் தங்கள் வீட்டில் விஜய் என்று ஏதாவது குழந்தைக்கு பெயர் இருந்தால் கூட அழித்து விட்டு மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். காரணம் இவர் ஜெயாவை சந்தித்ததன் விளைவு இதல்லாம். இன்று தமிழக அரசியலில் மிகச்சிறந்த காமடியன் ரேசில் இவருக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.
ராமராஜன்: இவருக்கு கரகாட்டகாரனில் ஆரம்பித்த சுக்கிரதெசை அவர் ஜெ கட்சியில் சேரும் வரை இருந்தது. பின்னர் தான் நிரந்தர சனி பிடித்தது அவருக்கு. ஜெ அதிமுகவுக்கு எப்படி நிரந்தர பொதுச்செயலாளரோ அது போல சனிபகவான் ராமராஜன் கூட நிரந்தரமாக ஒண்டு குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். சோத்துக்கே சிங்கி அடிப்பதாக ஒரு பத்திரிக்கை கூட பேட்டி எடுத்து எழுதியது. இவரைப்போல கதாநாயகனும் இல்லை. இவரைப்போல காமடியனும் அரசியலில் இல்லை. இப்போது பிரச்சாரத்துக்கு போக முடியாத படி ஒரு சாலை விபத்தில் மாட்டி கொண்டு விட்டார். இல்லாவிடில் இவர் பிரச்சாரத்தினால் 234 தொகுதியிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். (என்று நினைத்து கொண்டிருக்கின்றார்.. அப்படியெனில் அவர் காமடியனா அல்லது கதாநாயகனா?
விஜய்காந்த்: இவர் ஆரம்பத்தில் சும்மா தான் இருந்தார். பின்னர் திரைப்பட சங்கத்து செயலாளர் பொறுப்பு வந்ததும் ஏகப்பட்ட கட்ட பஞ்சாயத்துகள் இவரிடம் வர அந்த தலைமை போதை தலைக்கேற சுற்றி இருப்பவர்கள் இவருக்கு முதல்வர் ஆசையை தூண்டிவிட அந்த நேரத்தில் ரமணா படம் நல்ல கதையம்சத்துடன் வெற்றியும் கொடுக்க இவருக்கு அரசியல் ஆசை வந்து தொலைத்தது. காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தது போல நெடுஞ்சாலைத்துறையும் ஒரு மேம்பாலத்துக்கு இவருடைய திருமண மண்டபத்தில் கைவைக்க உடனே கட்சி ஆரம்பித்து விட்டார்.
அதிலே அவரது ஆரம்பகால நிலைப்பாடுகள் என்னவோ நன்றாகத்தான் இருந்த்து என்றாலும் பின்னர் விருத்தாசலத்திலே அவர் நின்று வென்று அதன் பின்னர் நடந்தவைகள் தான் அவரை காமடியன் ஆக்கின. அவரது புத்திசாலித்தன்மே அவர் பாமக கோட்டை என கருத்தப்பட்ட விருந்தாசலத்தின் நின்றது தான். அப்போது டாக்டர் அய்யா தனது சாதி ஓட்டின் மீது கொண்ட அதீத நம்பிக்கை மக்களுக்கு குறிப்பாக அந்த பகுதியில் வசித்த மாற்று சாதி மக்களுக்கு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தின. வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்கிற அந்த கோஷத்தை அப்பகுதி மக்கள் தீவிரமாக எதிர்த்தனர். அப்போது அதன் மாற்றாக திமுகவை விட ஒரு நடுநிலையாளருக்கு ஓட்டு போட்டால் என்ன என்கிற மனோநிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த் ஒரே காரணத்தால் மட்டுமே விஜயகாந்த் அங்கே வெற்றி பெற முடிந்தது. அந்த வெற்றிக்கு பின்னர் தான் அந்த கட்சிக்கு "தொண்டர்கள்" பெருகினர். அதாவது அது வரை அவருக்கு ஓட்டளித்த நடுநிலையாளர்கள், ரசிகர்கள் தவிர்த்து "தொண்டர்கள்" என்பவர்கள் புதிகாக வந்து சேர்ந்தனர். அவர்களின் குறி கட்சி பத்வியின் மேல் நின்றது. வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் என்கிற மாதிரி விஜயகாந்து நடவடிக்கைகளும் ஆகின. குடித்து விட்டு சட்டமன்றம் வந்து பிரச்சனை ஆகியது. வ்டிவேலு கிரி படத்தில் "அக்காவை நீ வச்சுக்கோ, பேக்கரியை நான் வச்சுக்கறேன்" என்கிற மட்டமான ரசனையுடைய காமடி காட்சி உள்ள படத்தில் கடைசியில் ஒரு கலக்டர் சொல்லுவார் "நேற்று கூட உன்னை பற்றி தான் கலக்டர் மீட்டிங்ல பேச்சு வந்தது" என்று. அதற்கு வடிவேலு " அடச்சே.. இதல்லாமா கலக்டர் மிட்டிங்ல பேசுவீங்க" என கேட்பார். அது போல ஒரு எம் எல் ஏ குடித்துவிட்டு வருவதும், ஒரு முன்னாள் முதல்வர் அதை சொல்லி திட்டுவதும் அதற்கு பதிலாக இவர் " நீ பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தியா" என கேட்டதும், ரவிக்குமார், செல்வபெருந்தகை போன்ற விசி கட்சி எம் எல் ஏக்கள் பக்கத்தில் உட்காருபவர்கள் போய் முதல்வரிடம் அது உண்மை என சொல்வதும்... இதல்லாம் விஜயகாந்தை அரசியலுக்கு லாயக்கு இல்லாத ஒரு காமடியன் ஆக்கிய ஆரம்ப கட்டங்கள்.
அதன் பிறகு இவர் தன் கட்சி சேலத்து மாநாட்டில் நிற்க முடியாமல், பேசியதையே திரும்ப திரும்ப பேசியதும், தடுமாறியதும், எனக்கு நாக்கு குழரும் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததும் பத்திரிக்கைகளால் மறைக்கப்பட்டாலும், அதாவது அப்போது ஜெவுடன் எப்படியாவது விஜயகாந்தை கூட்டணி சேர்த்துவிட வேண்டும் என்கிற ஆசைப்பட்ட பத்திரிக்கைகள் அதை மறைத்ததும் ஆனாலும் கேப்டன் டிவியின் நேரடி ஒளிபரப்பில் மக்கள் அதை பார்த்ததும் எல்லாமே நட்ந்தன. அப்போதும் திமுக போன்ற கட்சிகள் வாய்மூடி மௌனமாக இருந்தன.
அதன் பின்னர் ஜெவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது ஜெவுக்கு சமமான அகங்காரத்தை விஜயகாந்து வெளிப்படுத்திய போதும், 40 சீட்டுக்கு நான் கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் என சொல்லிவிட்டு 41 சீட்டு வாங்கி கொண்டதையும், அதன் முன்னர் "விஜயகாந்து ரோசக்காரர், மானம் உள்ளவர் ஜெவுடன் கூட்டணி வைக்க மாட்டார்" என அழகிரி அவர்கள் சொன்னதுக்காக அன்றைக்கே போய் அங்கு இறுகிய முகத்துடன் அடக்கமாக உட்காந்ததும், பின்னர் அழகிரியிடம் நிருபர்கள் கேட்டதற்ற்கு அவர் சிம்பிளாக "ஆமாம் சொன்னேன். ஆனால் அவர் தான் ரோசக்காரன் இல்லை, மானம் உடையவன் இல்லை என சொல்லிவிட்டார்" என சொன்னதும், பின்னர் கூட்டணி முறிந்து போன போது என்ன பேசுகிறோம் என தெரியாமல் நிருபர்களிடம் உளறி கொட்டியதும், இப்போது வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடையும் நேரத்தில் ஜெவின் தேர்தல் பிரச்சாரம் திருத்தி வெளியிடப்பட்ட போது அதில் தேமுதிகவின் ஒரு தொகுதியும் இல்லாமையும், அதே நேரத்தில் இவர் ஸ்டாலினை எதிர்த்து மாய்ந்து மாய்ந்து அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ததையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இதோ ஜெவின் தந்திரம் பலிக்க போகின்றது. கடந்த் தேர்தல்களில் விஜயகாந்தால் தான் இழந்த தொகுதிகள் அதிகம் என தெரிந்து தன் கூட்டணியில் கொண்டு வந்து கட்டி போட்டு அந்த 41 தொகுதியை தவிர வேறு எதிலும் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் செய்து விட்டு, அந்த 41 தொகுதிகள் போகட்டும் என விட்டு விட்டு மீதியில் தன் கவனத்தை செலுத்த போகின்றார் ஜெ. இப்போது அல்லது இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் தான் விஜயகாந்துக்கு தான் ஒரு காமடி பீஸ் என்பதே தெரியவரும். கடந்த தேர்தல்களில் வைகோ ஒரளவு நல்ல நிலையில் இருந்த போது ஜெ பேசிய கூட்டத்தில் "வைகோ வாழ்க" என கோஷமிட்ட மதிமுக தொண்டர்களை பார்த்து ஜெ பொறிந்து தள்ளியது இப்போது தான் ஞாபகம் வரும் விஜயகாந்துக்கு... எனவே தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அடுத்த காமடியனும் ரெடி..இனி விஜய்காந்த் நினைத்தாலும் மூன்றாவது அணி அமைக்க முடியாது, தனித்து நிற்க முடியாது, தனித்து நின்றாலும் அந்த 41 தொகுதி மட்டுமே கிடைக்கும். தான் ஒரு கருப்பு எம்ஜிஆர் என கூட்டத்தில் சொல்லிக்கொள்ள முடியாது. அடுத்த முதல்வர் என்றோ முதல்வர் வேட்பாளர் என்றோ சொல்லிக்கொள்ள முடியவே முடியாது...
அடுத்து திமுக கூட்டணியில் பார்ப்போம். இங்கு வடிவேலு என்னும் காமடியன் முதல் தேர்தல் கூட்டத்தில் திமுக தலைவர், பொருளாளர், தென்மண்டல அமைப்பு செயலாளர் உட்பட கூட்டணி கட்சிகளின் அனைத்து தலைவர்கள் உட்பட முக்கியமாக நடிகர்களை எதிர்க்கும் பாமக தலைவர், விசி தலைவர் உட்பட அனைவரின் முன்பாக பேச ஆரம்பிக்கின்றார். இது அவருக்கு அரசியல் மேடையின் முதல் கன்னிப்பேச்சு.
அவர் பேசிய மாடுலேஷன், தொணி எல்லாவற்றையும் விட்டு விடலாம். அது எல்லாம் போகப்போக சரியாகும். ஆனால் பேசிய விஷயம் என்ன? அத்தனை தலைவர்கள் முன்னிலையில் விஜயகாந்தின் குடிப்பழக்கத்தை ஆரம்பித்து பேச போகின்றார் என்பது திமுக தலைமைக்கு தெரியாமல் இருந்திருக்குமா? அல்லது திமுக தலைமையே சொல்லித்தான் அதை பேசியிருப்பாரா? இரண்டில் ஒன்று தான் நடந்திருக்கும். அதாவது "தான் நல்லவன் தனக்கு ஓட்டு போடவும் என கூறி மக்களை ஏமாற்றி இது நாள் வரை தன்னை பற்றி ஒரு புனிதபிம்பத்தை காட்டிக்கொண்டு இருந்த விஜயகாந்தின் முகத்திரையை முதலில் கிழிக்க வேண்டும். அது யாரால் முதலில் கிழிக்கப்பட வேண்டும்? திமுகவினரோ, அலது விசி, பாமக போன்றவர்களோ பேச முற்பட கூடாது. அவர்கள் ஒன்றும் அதிமுக தலைவி மாதிரி அவசர குடுக்கை இல்லை. அப்படி சொன்னால் "நீ வந்து ஊத்தி கொடுத்தாயா?" என ஜெ மூக்கறு பட்ட மாதிரி ஆகும். அதனால் வடிவேலுவை விட்டே பேச சொன்னால் விஜயகாந்து அப்படி அந்த கேள்வியை கேட்டால் ஆமாம் நான் ஊத்தி கொடுத்தேன் என பதிலடியும் கிடைக்கும். ஏனனில் அவரும் இவரும் பலபடங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். அவருடைய அத்தனை கோக்குமாக்குகளும் இவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கின்றது. முதல் கல் எறிவது தான் சிரமம். பின்னர் அடுத்த கல்லை மற்றவர்கள் பார்த்து கொள்வர். ஆக அன்று பேசிய அத்தனை பேரின் பேச்சில் வடிவேலுவின் பேச்சு அடிமட்ட வாக்காளனுக்கும் போய் சேர்ந்தது என்பது உண்மையோ உண்மை. இதை யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா? அது வடிவேலுவாக இருந்தால் என்ன விருச்சிககாந்தாக இருந்தால் என்ன, விஷயம் போய் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாகி விட்டது. சேர்த்தாகிவிட்டது. அடுத்த நாளே திருமா திருச்சியில் அதை தொட்டு பேசுகின்றார். இனி திமுகவின் பேச்சாளர்கள் திரும்ப திரும்ப அந்த குடிகார கதையை பேசுவர்.
நான் இப்போது இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று தான். குடிப்பது தவறா? யார் தான் குடிக்கவில்லை? தனிப்பட்ட ஒழுக்கத்தை பற்றி பேசினால் சரியா? இந்த விவாதம் எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான். விஜயகாந்து தன் வீட்டில் குடித்து விட்டு தூங்கினால் யார் கேட்க போகின்றனர். அவரை நம்பி இருக்கும் அவரது தொண்டர்கள் மத்தியில் மேடையில் தள்ளாடுவது தவறு என்பதே இங்கு வைக்கபடும் வாதம். குடித்து விட்டு மக்கள் மன்றத்தில் வந்து சபை நாகரீகம் தெரியாமல் உட்காருவது பேசுவது தவறு. குடித்து விட்டு உளருவது மிகப்பெரிய தவறு. இதைத்தான் திமுக எதிர்கின்றது. இதோ ஜெயலலிதா குடிப்பார் என்பது ஊரே அறிந்த விஷயம். இது வரை அந்தம்மா சிவந்த கண்களுடன், கலைந்த தலையுடன் தன்னை காட்டிக்கொண்டது உண்டா? பொதுவெளியில் எப்படி நடந்து கொள்கின்றது. ஜெ குடிப்பார் என எவனாவது பேசினால் மானநஷ்ட வழக்கு போடும். தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக சொல்லும். ஆனால் ஜெவை பார்த்து ஊத்தி கொடுத்தாயா என்று மடக்கிய விஜயகாந்தால் வடிவேலு பேச்சுக்கு "அவர் பேச்சுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல போவது இல்லை" என்கிற சப்பைகட்டு தான் கட்ட முடிகின்றது. இதைத்தான் சொன்னேன். திமுக அணியில் காமடியனும் ஹீரோ தான். அதிமுக அணியில் ஹீரோவும் காமடியன் தான் என்று.
இந்த நேரத்தில் மற்றும் ஒன்று கூட சொல்ல வேண்டும். திமுகவில் இருக்கும் குமரிமுத்து, அதிமுகவில் இருக்கும் குண்டு கல்யாணம் ஆகியோரை பற்றி ஏன் திமுகவில் இருக்கும் விருச்சிககாந்து ஆகிய என்னை பற்றியும் நான் எதும் சொல்லவில்லை. நாங்கள் வயிற்று பிழைப்புக்காக காமடியன்கள் ஆகியிருக்கின்றோம். அது கூட மக்களின் ஒரு விதமான வக்கிர புத்தி என்று தான் சொல்லவேண்டும். குமரிமுத்துவுக்கு ஒரு கண் சரியில்லை. அதை பார்த்து சிரிக்கும் மக்கள், அதே போல குண்டுகல்யாணம் உருவம் யானை போல பெரிது. அதை பார்த்து சிரிக்கும் மக்கள், எனக்கு பலெடுப்பு, அழகில்லாதவன், கருப்பு இன்ன பிற குறைகள்... இவையெல்லாம் பார்த்து சிரிக்கும் மக்கள் வக்கிர புத்தி படைத்தவர்கள் தானே? கண்டிபபக நாங்கள் மூவரும் நகைச்சுவை நடிப்பில் தேர்ந்தவர்கள் என சொல்லவே முடியாது. முடியவே முடியாது. ஆனால் அண்ணன் குமரி முத்துவின் மேடைப்பேச்சை கேளுங்கள், அண்ணன் குண்டு கல்யாணத்தின் மேடைப்பேச்சை கேளுங்கள், மழை பொழிந்தது போல பேசி ஆனால் கூட்டத்தை கட்டிப்போடும் அரசியல் தெரிந்தவர்கள். இவர்களை நடிகர்களாக பார்க்காமல் அரசியவாதிகளாக பாருங்கள் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.
4 comments:
கடைசி பத்தில நின்னுட்டீங்க!
தன்னம்பிக்கையோட இருக்கற நீங்களும் ஹீரோதான் பாஸ்!
super..........
எந்த படத்துல நடிச்சீங்க..
ஹீரோக்களின் ஹீரோ நீங்க, ஸூப்பர்
Post a Comment